கிராமங்களை விட்டு வெளியேறுங்கள்

நீங்கள் கவனித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை, ஏதோ பிரச்சனைகளாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சொந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பெரும்பாலான குடும்பங்கள் நன்கு வளர்ச்சியடைந்தே இருக்கின்றன.

கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் என்று எப்படிப் பார்த்தாலும் நன்கு வளர்ந்திருக்கிறார்கள்.

கிராமத்திலேயே இருக்கும் வரை ஊரில் உள்ள திண்ணையில், மேடையில் உட்கார்ந்து கொண்டு அடுத்தவன் பொழப்பை எப்படிக் கெடுக்கலாம், எப்படி புறம்பேசலாம் என்பதிலேயே பெரும்பாலான நேரம் கழிந்துவிடுகிறது. பிறகு இல்லலாத வெட்டி சாதிப்பெருமையே போதும் என்கிற மனநிலைதான் இருக்கும்.

முக்கியமாக தன்மையாக பேசும் பணிந்து பேசும் குணம் இல்லாமல் ஒருவித தலைக்கனத்துடனேயே இருப்போம்.

கேரளாவில் இருந்து இங்கு வந்து டீக்கடை,பழக்கடை ஒருவன் வைத்தால் அங்கு வியாபாரம் நடக்கும், அதற்கு காரணம் அவன் வெட்டி பந்தா இல்லாமல் நாம் திட்டினாலும் வாங்கிக்கொள்வான்.

அதே ஒரு உள்ளூர்க்காரன் கடையில் சென்று நாம் பந்தா செய்ய முடியாது. அடுத்து பக்கத்து வீட்டுக்காரன் வியாபாரம் செய்து வளர்வதும் நமக்கு அறவே ஆகாது.

இதுவே பிழைப்பிற்காக சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேறும்போது நமது அத்தனை எக்ஸ்ட்ரா லக்கேஜ்களையும் விட்டுவிட்டே செல்வோம்.

இதைத்தான் நிறுவனங்களில் வேலையில் இருப்பவர்களிடம் நீங்கள் உங்களது comfort zone ல் இருந்து வெளியே வராதவரை வளர முடியாது என்பார்கள்.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பிள்ளைகள் கல்வியிலும் வேலை வாய்பிலும் எங்கோ முன்னேறியிருப்பார்கள்.

இன்னும் கிராமத்திலேயே இருக்கும் பல குடும்பங்களில் இன்னும் முதல்தலைமுறை பட்டதாரிகள் கூட இல்லை.

இவர்கள் கிராமங்களை விட்டு வெளியேறக் கூடாது, கடைசிவரை சொந்த ஊர்ப்பெருமை, சாதிப்பெருமை பேசிக்கொண்டு அங்கேயே இருந்தால்தான் நமக்கு இங்கு போட்டியிருக்காது என்கிற எண்ணத்தில்தான் இந்த பாரம்பரியப் பெருமை, ஆர்கானிக் ஃபார்மிங், நாட்டு மாடு என்று நெஞ்சை நக்கும் WhatsApp பதிவுகளை உருவாக்கி பரப்பி விடுகிறார்கள்.

இதில் ஏமாந்து முட்டாள்கள் சிலர் கிடைத்த நல்ல வாய்ப்பையும் வாழ்க்கையையும் தொலைக்கிறார்கள்.