சாதி ஒழிப்பு

நீங்கள் ஏன் இட ஒதுக்கீடு, சமூக நீதி,நீட் எதிர்ப்பு என்று மட்டும் அதிகமாக பேசுகிறீர்கள்? சாதி ஒழிப்பு பற்றி அதே அளவிற்கு பேசவில்லை? அப்படி என்றால் உங்களுக்கு எல்லாம் உள்ளூர சாதி வெறி இருக்கிறதா?

தமிழகத்தின் கிராமங்களில் சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறவர்களும் ஒடுக்குகிறவர்களும் இருக்கிறார்கள். நான் ஒரு கிராமத்தான். என் ஊரில் சாதி ஒழிப்பு பற்றி பேசினால் அதை ஒடுக்கப்படும் மக்கள் ஆதரிப்பாளர்களே ஒழிய அதை வைத்து ஒடுக்குகிறவர்கள் கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.

ஒருவேளை நான் என்னை போராளியாக நல்லவனாக காட்டிக் கொள்வது மட்டுமே எனது நோக்கம் என்றால் நான் சாதி ஒழிப்பைப் பற்றி மட்டுமே பேசி பாதிக்கப்பட்ட மக்களிடம் மட்டும் நல்லவன் என்று பெயர் வாங்கலாம். ஆதிக்கம் செய்யும் தரப்பிடம் எந்த மாற்றமும் ஏற்படாது.

ஆக அவர்களிடம் என்ன பேச முடியும்? முதலில் நீயே ஒரு அடிமைதான், இதுவரை ஒரு மருத்துவர் கூட இங்கிருந்து உருவாகவில்லை, அரசு உயர் பதவிகளில் ஒருவர் கூட இல்லை, இங்கு இருக்கும் உனது பத்து ஏக்கர் நிலத்தை விற்றால் கூட அடையாறில் ஒரு வீட்டை வாங்க முடியாது,

உனது உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கிறார்கள், உன் குழந்தைகள் கல்லூரி வாசலையே தொட முடியாத அளவிற்கு சதிகள் செய்கிறார்கள். எட்டாம் வகுப்பைக் கூட தாண்டக் கூடாது என்று சதி செய்கிறார்கள்.

நீண்ட ஆண்ட பரம்பரை அல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமைதான்.

போய் உங்கள் நிலத்தின் பத்திரத்தை எடுத்துப் பார், எப்பொழுது முதன் முதலில் உங்களுக்கு நிலம் வந்தது என்று பார்.

உன் எதிரி உள்ளுரில் உன்னை சக மனிதனாக மதிக்கும் மக்கள் அல்ல, மாறாக உன்னை அடியாளாக பயன்படுத்தும் உன் உரிமைகளைப் பறிக்கும் கூட்டம் என்று தொடர்ந்து எடுத்துச் சொல்கிறோம்.

எங்களைப் போன்றவர்களின் இந்த தொடர் செயல்பாடு பலருக்கு புரிய வைத்திருப்பதை கண் கூடாகப் பார்க்கிறேன். இதைப் புரிந்தவர்கள் ஒருபோதும் சாதி ரீதியான ஆதிக்கத்திற்கு துணைபோவதில்லை.

சுயமரியாதை, சமூக நீதி பற்றி தொடர்ந்து பேசுவதுதான் மிக அதிகப் பலனைத் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்

உங்களிடம் போராளி என்ற பெயர் வாங்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் பணியைத் தொடருவோம்.

தொடர்ந்து சமூக நீதி பற்றி பேசுவோம்.

கார்த்திக் இராமசாமி.
26-Aug-2019